இலங்கையின் வருடாந்த பாடசாலைக் குடிமதிப்பு அறிக்கை (School Census Report - 2025)


இலங்கை கல்வி அமைச்சின் புள்ளிவிவரப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பாடசாலைக் குடிமதிப்பு (Annual School Census) அறிக்கையானது, நாட்டின் கல்வித்துறையின் தற்போதைய நிலைமைகளைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றது. 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதியினை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையில் நடைபெறும் அதிபர், ஆசிரியர், இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை (SLTS) போன்ற போட்டிப் பரீட்சைகளுக்குத் தயாராகிக் கொண்டிருப்போருக்கு, இப்புள்ளிவிவரங்கள் மிக மிக அத்தியாவசியமானதாகும்.

பாடசாலைகளின் வகைப்பாடும் நிர்வாகக் கட்டமைப்பும்

இலங்கையில் மொத்தமாக 10,047 அரச பாடசாலைகள் இயங்குகின்றன. இவற்றில் மத்திய அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகிக்கப்படும் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 396 ஆகவும், மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்படும் மாகாணப் பாடசாலைகளின் எண்ணிக்கை 9,651 ஆகவும் காணப்படுகின்றன.

நிர்வாக வசதிக்காக நாடு முழுவதும் 100 கல்வி வலயங்களும், 312 கல்விக் கோட்டங்களும் செயற்படுகின்றன. மாகாண ரீதியாக நோக்கும் போது, அதிக அரச பாடசாலைகளைக் கொண்ட மாகாணமாக மத்திய மாகாணம் (1,507 பாடசாலைகள்) விளங்குகின்றது. குறைந்த பாடசாலைகளைக் கொண்ட மாகாணமாக வடமத்திய மாகாணம் (805 பாடசாலைகள்) காணப்படுகின்றது. மாவட்ட அடிப்படையில் அதிக பாடசாலைகளைக் கொண்ட மாவட்டமாக குருநாகல் (868 பாடசாலைகள்) முதலிடம் வகிக்கின்றது.

பாடசாலைகளில் கற்பிக்கப்படும் தரங்களின் அடிப்படையில் அரச பாடசாலைகள் 4 பிரதான வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

  1. 1AB பாடசாலைகள் (1,009)தரம் 1-13 வரை கலை, விஞ்ஞான, வர்த்தக மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளைக் கொண்ட பாடசாலைகள்.
  2. 1C பாடசாலைகள் (1,962): தரம் 1-13 வரை கலை மற்றும் வர்த்தக பிரிவுகள் மட்டும் கொண்ட பாடசாலைகள்
  3. Type 2 பாடசாலைகள் (3,244):தரம் 1-11 வரை (கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரை) கல்வி கற்பிக்கப்படும் பாடசாலைகள்.
  4. Type 3 பாடசாலைகள் (3,832): தரம் 1 முதல் 5 வரை அல்லது 1 முதல் 8 வரையான ஆரம்பப் பாடசாலைகள்.
உள்ளூராட்சி சபைகளின் அடிப்படையில் பாடசாலைகளின் பரம்பலை அவதானித்தால், பெரும்பாலான பாடசாலைகள் (8,997) பிரதேச சபைப் (Pradeshiya Sabha) பிரிவுகளுக்கு உள்ளேயே அமைந்துள்ளன. மாநகர சபைப் (MC) பிரிவுகளில் 638 பாடசாலைகளும், நகர சபைப் (UC) பிரிவுகளில் 412 பாடசாலைகளும் உள்ளன.

மாணவர் சமூகத்தின் புள்ளிவிவரங்கள்

இலங்கையின் அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 3,747,544 ஆகும். இவர்களில் தேசிய பாடசாலைகளில் 825,644 (22.0%) மாணவர்களும், மாகாணப் பாடசாலைகளில் 2,921,900 (78.0%) மாணவர்களும் கல்வி கற்கின்றனர். மாணவர் தொகையைப் பாலின அடிப்படையில் நோக்கும்போது, மாணவிகள் 1,891,444 (50.5%) ஆகவும், மாணவர்கள் 1,856,100 (49.5%) ஆகவும் காணப்படுகின்றனர்.

2025 ஆம் ஆண்டிற்கான தரம் 1 புதிய மாணவர் அனுமதியில் மொத்தமாக 266,281 மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 135,587 ஆண்களும் 130,694 பெண்களும் ஆவர்.

கற்பித்தல் மொழியின் அடிப்படையில், 6,157 பாடசாலைகள் தனிச் சிங்கள மொழியிலும், 2,977 பாடசாலைகள் தனித் தமிழ் மொழியிலும் இயங்குகின்றன. மொத்த மாணவர்களில் 2,692,039 (71.8%) பேர் சிங்கள மொழியிலும், 913,364 (24.4%) பேர் தமிழ் மொழியிலும், 142,141 (3.8%) பேர் இருமொழி / ஆங்கில ஊடகத்திலும் கல்வி கற்கின்றனர்.

கற்றல் நிலைகள் (Grade Cycles) வாரியாக மாணவர்களின் பரம்பல்:
  • ஆரம்பப் பிரிவு (தரம் 1-5):   1,427,829 மாணவர்கள்.
  • கனிஷ்ட இடைநிலைப் பிரிவு (தரம் 6-9):   1,280,744 மாணவர்கள்.
  • சிரேஷ்ட இடைநிலைப் பிரிவு சாதாரண தரம் (தரம் 10-11):   622,213 மாணவர்கள்.
  • சிரேஷ்ட இடைநிலைப் பிரிவு உயர்தரம் (தரம் 12-13):   409,325 மாணவர்கள்.
  • சிறப்பு கல்வி அலகுகளில் (Special Edu. Units) 7,433 மாணவர்கள்.

ஆசிரியர் வளமும் தகைமைகளும்

ஆசிரியர் போட்டிப் பரீட்சைகளைப் பொறுத்தவரை, ஆசிரியர் ஆளணி விபரங்கள் மிகவும் பிரதானமானவை. அரச பாடசாலைகளில் கற்பிக்கும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 242,309 ஆகும். இந்தத் தொகையில் அதிபர்களின் எண்ணிக்கை 12,648 ஆகக் காணப்படுகின்றது.

கல்வித்துறையில் பெண்களின் வகிபாகம் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. மொத்த ஆசிரியர்களில் 186,896 (77.1%) பேர் பெண் ஆசிரியர்களாவர். ஆண் ஆசிரியர்களின் எண்ணிக்கை 55,413 (22.9%) மட்டுமே. மேலும், 42,803 (17.7%) ஆசிரியர்கள் தேசிய பாடசாலைகளிலும், 199,506 (82.3%) ஆசிரியர்கள் மாகாணப் பாடசாலைகளிலும் சேவையாற்றுகின்றனர்.

தொழில் தகைமைகளின் அடிப்படையில் ஆசிரியர்களின் வகைப்பாடு:

  • பயிற்சி பெற்ற பட்டதாரிகள் (Trained Graduates): 114,034 ஆசிரியர்கள் (47.1%).
  • பயிற்சி பெறாத பட்டதாரிகள் (Untrained Graduates): 40,816 ஆசிரியர்கள் (16.8%).
  • பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் (Trained Teachers): 85,296 ஆசிரியர்கள் (35.2%).
  • பயிற்சி பெறாத ஆசிரியர்கள் (Untrained Teachers): 2,076 ஆசிரியர்கள் (0.9%).

ஆசிரியர் - மாணவர் விகிதம் (Student-Teacher Ratio - STR)

கல்வியின் தரத்தை அளவிடும் முக்கிய சுட்டியாக ஆசிரியர்-மாணவர் விகிதம் அமைகின்றது. 2025 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, இலங்கையின் தேசிய சராசரி ஆசிரியர் - மாணவர் விகிதம் 15 ஆகக் காணப்படுகின்றது. தேசிய பாடசாலைகளில் இது 19 ஆகவும், மாகாணப் பாடசாலைகளில் 15 ஆகவும் காணப்படுகின்றது.

பாடசாலைகளின் அளவுக்கேற்ப இவ்விகிதம் கணிசமாக வேறுபடுகின்றது. 1 முதல் 50 மாணவர்களைக் கொண்ட மிகச் சிறிய பாடசாலைகளில் ஆசிரியர்-மாணவர் விகிதம் 5 ஆகக் காணப்படுகின்ற அதேவேளை, 4,000 இற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பிரமாண்டமான பாடசாலைகளில் இது 23 ஆக உயர்ந்து காணப்படுகின்றது.

 பாடசாலைகளின் பருமன் மற்றும் இன ரீதியான வகைப்பாடு

மாணவர்களின் தொகையின் அடிப்படையில் பாடசாலைகளைப் பகுப்பாய்வு செய்யும் போது, 1-50 மாணவர்களை மாத்திரம் கொண்ட சிறிய பாடசாலைகள் (Micro Schools) 1,645 உள்ளன. அதேபோன்று, 51-100 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 1,648 காணப்படுகின்றன. எனினும், 4,000 இற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் 33 மட்டுமே உள்ளன.

ஆசிரியர் தொகையின் அடிப்படையில் பார்த்தால், 10 இற்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலைகள் 3,065 ஆகவும், 100 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலைகள் 275 ஆகவும் உள்ளன.

இன மற்றும் சமூக அடிப்படையில் அமைக்கப்பட்ட பாடசாலைகளின் தரவுகள்:
  • சிங்களப் பாடசாலைகள்: 6,821.
  • தமிழ்ப் பாடசாலைகள்: 2,283.
  • முஸ்லிம் பாடசாலைகள்: 943.
  • பெருந்தோட்டப் பாடசாலைகள் (Estate Schools): 833

உயர்தரப் பிரிவுகளும் மாணவர் தெரிவுகளும்

க.பொ.த உயர்தரக் கல்வியை வழங்கும் பாடசாலைகளில் அதிகளவான பாடசாலைகள் கலைப் பிரிவை மாத்திரமே கொண்டுள்ளன.
  • கலைப் பிரிவு: 2,949 பாடசாலைகள் (147,061 மாணவர்கள்).
  • வர்த்தகப் பிரிவு: 1,874 பாடசாலைகள் (88,451 மாணவர்கள்).
  • உயிரியல் விஞ்ஞானம்: 995 பாடசாலைகள் (55,349 மாணவர்கள்).
  • பௌதிக விஞ்ஞானம்: 956 பாடசாலைகள் (49,127 மாணவர்கள்).
  • தொழில்நுட்பப் பிரிவு: 559 பாடசாலைகள் (48,052 மாணவர்கள்).

ஏனைய கல்வி நிறுவனங்கள் (பிரிவெனாக்கள் மற்றும் சிறப்புப் பாடசாலைகள்)

அரச பாடசாலைகள் தவிர்த்து ஏனைய கல்வி நிறுவனங்களும் இலங்கையின் கல்வியில் முக்கிய பங்குவகிக்கிறது. அரச உதவிபெறும் தனியார் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் 95 தனியார் பாடசாலைகள் இயங்குகின்றன. இவற்றில் மொத்தமாக 138,190 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

மேலும், அரச உதவிபெறும் விசேட தேவையுடையோருக்கான பாடசாலைகள் 27 விசேட இயங்குகின்றன. இவற்றில் 1,879 மாணவர்கள் கற்கின்றனர்.

அதேபோன்று, பௌத்த சமயக் கல்வியை வழங்கும் 822 பிரிவெனாக்கள் காணப்படுகின்றன. இவற்றில் 66,840 மாணவர்கள் கற்பதோடு, 7,077 அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர்.

முடிவுரை

2025 ஆம் ஆண்டின் பாடசாலைக் குடிமதிப்புத் தரவுகளின்படி, இலங்கையின் கல்வித்துறையானது 3.7 மில்லியன் மாணவர்களையும் 2.4 இலட்சம் ஆசிரியர்களையும் உள்ளடக்கிய ஒரு பாரிய வலையமைப்பாகும். பெண் ஆசிரியர்களின் அதிகூடிய விகிதாசாரம், ஆசிரியர் மற்றும் மாணவர் விகிதத்தில் உள்ள சீரற்ற பரம்பல், சிறிய பாடசாலைகளின் பெருக்கம் மற்றும் விஞ்ஞானத் தொழில்நுட்பப் பிரிவுகளை விடக் கலைப் பிரிவுகளின் ஆதிக்கம் ஆகியன இப்புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாகின்றன. போட்டிப் பரீட்சார்த்திகள் இந்த 1AB, 1C வகைப்பாடுகள், ஆசிரியர்களின் தொழில் தகைமைகள், மாகாண வேறுபாடுகள் தொடர்பான தரவுகளை ஆழமாக மனனம் செய்துகொள்வது பரீட்சைகளில் சிறந்த அடைவுகளைப் பெற வழிவகுக்கும்.

Previous Post Next Post