பல தசாப்தங்களுக்குப் பிறகு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையை நாசா நிகழ்த்தவுள்ளது. ஆர்ட்டெமிஸ் II எனப்படும் இந்தத் திட்டம், கடந்த 50 ஆண்டுகளுக்கும் பின் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முதல் பயணமாக அமையவுள்ளது.
1972ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அப்பல்லோ 17 திட்டத்திற்குப் பிறகு, பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையைத் தாண்டி மனிதர்கள் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இந்த வருடத்தின்(2026) ஏப்ரல் மாதம் இந்தத் திட்டத்தை செயற்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான மிக முக்கிய அடித்தளமாக இந்த ஆர்ட்டெமிஸ் திட்டம் கருதப்படுகிறது.
இந்தப் பயணத்தில் யார் யார் பயணிக்கவுள்ளனர்?
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்ட்டெமிஸ் II திட்டத்தில் மொத்தம் நான்கு விண்வெளி வீரர்கள் பயணிக்கவுள்ளனர். நாசாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன்(கமாண்டர்), விக்டர் குளோவர்(பைலட்), மற்றும் கிறிஸ்டினா கோச்(மிஷன் ஸ்பெஷலிஸ்ட்) ஆகியோருடன், கனடிய விண்வெளி முகமையச் சேர்ந்த (CSA) விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் ஆகிய நால்வரும் இந்தப் பயணத்தில் இடம்பெற்றுள்ளனர். சுமார் 10 நாட்கள் நீடிக்கும் இப்பயணத்தின் போது, விண்வெளி வீரர்கள் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க மாட்டார்கள். மாறாக, நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பூமிக்குத் திரும்புவார்கள். இவர்கள் சுமார் 4,700 மைல்கள் தொலைவு நிலவின் மறுபக்கத்திற்கு அப்பால் பயணிக்கவுள்ளனர்.
எதில் பயணிக்கவுள்ளனர்?
இந்த விண்வெளிப் பயணத்திற்கு ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (SLS) என்ற சக்திவாய்ந்த ஏவுகணையும், ஓரியன் (Orion) என்ற விண்கலமும் பயன்படுத்தப்பட உள்ளன.
- எஸ்.எல்.எஸ் ஏவுகணை (SLS Rocket):
322 அடி உயரமும், சுமார் 5.74 மில்லியன் பவுண்டுகள் எடையும் கொண்ட இந்த பிரம்மாண்ட ஏவுகணை, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு RS-25 என்ஜின்களும், இரண்டு திட எரிபொருள் பூஸ்டர்களும் (Solid Rocket Boosters) பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு பூஸ்டர்களும் ஏவுகணைக்குத் தேவையான 75 சதவீத உந்துவிசையை முதல் இரண்டு நிமிடங்களில் வழங்குகின்றன. ஏவுகணையை ஏவுதளத்திற்கு நகர்த்திக் கொண்டு செல்ல பிரத்யேகமாக 'க்ராலர்-டிரான்ஸ்போர்ட்டர் 2' பயன்படுத்தப்படுகிறது. இது 18 மில்லியன் பவுண்டுகள் எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
- ஓரியன் விண்கலம் (Orion Spacecraft):
விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாக ஏற்றிச் சென்று மீண்டும் பூமிக்குக் கொண்டு வர ஓரியன் விண்கலம் பயன்படுத்தப்படுகிறது. இதில் 'க்ரூ மாட்யூல்' (Crew Module), 'சர்வீஸ் மாட்யூல்' (Service Module), மற்றும் 'லான்ச் அபார்ட் சிஸ்டம்' (Launch Abort System) என மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன. விண்வெளி வீரர்களின் பாதுகாப்பிற்காக இந்த விண்கலத்தில் மேம்படுத்தப்பட்ட உயிர் காக்கும் அமைப்புகள், கதிர்வீச்சுத் தடுப்புகள் மற்றும் உலகின் மிகப்பெரிய வெப்பக் கவசம் (Heat shield) ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. விண்கலத்திற்குள் விண்வெளி வீரர்கள் உறங்குவதற்காக பிரத்யேக 'ஸ்லீப்பிங் பேக்ஸ்' (Sleeping Bags) மற்றும் உடற்பயிற்சி செய்ய 'ஃப்ளைவீல்' (Flywheel) போன்ற உபகரணங்களும் உள்ளன.
துணை செயற்கைக்கோள்கள் (Secondary Payloads):
ஆர்ட்டெமிஸ் II திட்டத்தின் மூலம் பின்வரும் நான்கு சிறிய அளவிலான துணை செயற்கைக்கோள்களும் (CubeSats) விண்வெளிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
- ATENEA - கதிர்வீச்சு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் துணை செயற்கைக்கோள்.
- TACHELES - எதிர்கால நிலவுப் பயணங்களுக்கான தொழில்நுட்பங்களை ஆராயும் துணை செயற்கைக்கோள்.
- Space Weather CubeSat-1 - விண்வெளி வானிலை மற்றும் கதிர்வீச்சை அளவிடும் துணை செயற்கைக்கோள்.
- K-Rad Cube - விண்வெளி கதிர்வீச்சால் ஏற்படும் உயிரியல் தாக்கங்களை அளவிடும் துணை செயற்கைக்கோள்.
மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய அறிவியல் ஆய்வுகள்
ஆர்ட்டெமிஸ் II திட்டம் வெறும் விண்வெளிப் பயணம் மட்டுமல்ல, இது பல முக்கிய அறிவியல் ஆய்வுகளை உள்ளடக்கியுள்ளது. விண்வெளியில் மனிதர்களின் உடல்நிலை மற்றும் மனநிலை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அறிய நாசா விரிவான திட்டங்களை வகுத்துள்ளது.
- ARCHeR மற்றும் AVATAR ஆய்வுகள்:
விண்வெளி வீரர்களின் தூக்கம், மன அழுத்தம், மற்றும் குழுவாக இணைந்து செயல்படும் திறன் ஆகியவற்றை ARCHeR ஆய்வு கண்காணிக்கும். மேலும், AVATAR திட்டத்தின் மூலம் மனிதர்களின் எலும்பு மஜ்ஜை செல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட 'ஆர்கன் சிப்ஸ்' (Organ chips) மூலம், கதிர்வீச்சு மற்றும் நுண் ஈர்ப்பு விசை மனித உடலை எவ்வாறு பாதிக்கிறது என்பது கண்டறியப்படும்.
- கதிர்வீச்சு மற்றும் பிற உயிரியல் ஆய்வுகள்:
ஓரியன் விண்கலம் நிலவின் தொலைதூரப் பக்கத்தின் (Far side) பின்னால் செல்லும் போது, பூமியுடனான தொடர்பு சுமார் 45 நிமிடங்கள் தடைபடும். மேலும், கதிர்வீச்சு அதிகமுள்ள பகுதிகளைக் கடக்கும் போது, விண்வெளி வீரர்களின் உமிழ்நீர், சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, விண்வெளியில் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது என்பதும் ஆராயப்படும்.
தரைக்கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் மீட்புப் பணி (Ground Systems and Recovery)
புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள 'லான்ச் பேட் 39B' (Launch Pad 39B) இலிருந்து இந்த விண்கலம் ஏவப்படும். நாசாவின் எக்ஸ்ப்ளோரேஷன் கிரவுண்ட் சிஸ்டம்ஸ் (Exploration Ground Systems) குழுவினர் இதற்கான ஏவுதளப் பணிகளை மேற்கொள்கின்றனர். விண்கலம் ஏவப்பட்ட பிறகு, பூமியுடனான தொடர்பை நிலைநிறுத்த 'டீப் ஸ்பேஸ் நெட்வொர்க்' (Deep Space Network) மற்றும் 'நியர் ஸ்பேஸ் நெட்வொர்க்' (Near Space Network) ஆகியவை பயன்படுத்தப்படும். மேலும், அதிக தரவுகளை விரைவாக அனுப்புவதற்காக 'லேசர் தகவல் தொடர்பு' (Laser communications) முறையும் சோதிக்கப்படவுள்ளது.
10 நாள் பயணம் முடிந்து ஓரியன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது, 11 பாராசூட்டுகள் வரிசையாகத் திறக்கப்பட்டு விண்கலத்தின் வேகம் குறைக்கப்படும். பின்னர் பசிபிக் பெருங்கடலில் ஓரியன் பாதுகாப்பாக வந்து விழும் (Splashdown). விண்வெளி வீரர்களையும் விண்கலத்தையும் மீட்பதற்காக, லில்லி வில்லாரியல் தலைமையிலான மீட்புக் குழுவினர் அமெரிக்க கடற்படை மற்றும் விமானப் படையுடன் இணைந்து தயாராக இருப்பார்கள். கடலில் விண்கலம் விழுந்ததும், முதலில் விண்வெளி வீரர்கள் மீட்கப்பட்டு கப்பலுக்குக் கொண்டு வரப்படுவார்கள். அதன்பிறகு விண்கலம் மீட்கப்படும். இதற்காக நாசாவும் ராணுவமும் இணைந்து பல கட்ட ஒத்திகைகளை (Underway Recovery Tests) வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளன.
ஆர்ட்டெமிஸ்
II திட்டமானது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய
சகாப்தத்தின் தொடக்கமாகும். இத்திட்டத்தின் வெற்றி, அடுத்து
வரக்கூடிய ஆர்ட்டெமிஸ் III (2027-ஆம் ஆண்டில் நிலவின் தென் துருவத்தில் மனிதர்களைத் தரையிறக்கும்
திட்டம்) மற்றும் எதிர்காலத்தில் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு (Mars) அனுப்பும் நாசாவின் நீண்டகால இலக்குகளுக்கு ஒரு வலுவான அடித்தளமாக
அமையும். மனித இனம் மீண்டும் ஆழமான விண்வெளியை நோக்கிச் செல்லும் இந்த வரலாற்றுப்
பயணம், விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப
வளர்ச்சியில் ஒரு மாபெரும் மைல்கல்லாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
