மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: உலக மற்றும் இலங்கை வரலாறு


மனித நாகரிகத்தின் வளர்ச்சியில், ஒரு நாட்டைச் சரியாக நிர்வகிப்பதற்கும் அதன் எதிர்காலத் திட்டங்களை அறிவியல் பூர்வமாக வகுப்பதற்கும் மிக முக்கியமான அடித்தளமாக அமைவது 'மக்கள் தொகைக் கணக்கெடுப்பு' (Census) ஆகும். இது வெறும் எண்களின் தொகுப்பு என்ற எல்லையைத் தாண்டி, ஒரு தேசத்தின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரப் பரிணாமங்களைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடியாகச் செயல்படுகிறது. பண்டைய காலம் தொட்டு இன்றைய நவீன டிஜிட்டல் யுகம் வரை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கடந்து வந்த வரலாற்றுப் பயணம் பல சுவாரசியமான தகவல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

உலகளாவிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் வரலாற்றுப் பின்னணி 

வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் , மக்கள் தொகையைக் கணக்கிடும் முறை சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டதை  அறிய முடிகிறது.

உலகின் முதலாவது அறியப்பட்ட கணக்கெடுப்பு கிமு 3800 அளவில் பாபிலோனியப் பேரரசில் நடைபெற்றது. அவர்கள் ஒவ்வொரு ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை மனிதர்களை மட்டுமன்றி, கால்நடைகள், வெண்ணெய், தேன், பால், கம்பளி மற்றும் காய்கறிகளின் இருப்பையும் துல்லியமாகக் கணக்கிட்டனர். அதனைத் தொடர்ந்து கிமு 2500 காலப்பகுதியில், பிரமிடுகளைக் கட்டுவதற்குத் தேவையான மனித வளத்தை மதிப்பிடுவதற்காக எகிப்தியர்கள் கணக்கெடுப்புகளைப் பயன்படுத்தினர். தொடர்ந்து, கிமு 1490 காலப்பகுதியில்  இஸ்ரேலில், இராணுவச் சேவைக்குத் தகுதியானவர்களை அடையாளம் காணவும், வரி வசூலிப்பை முறைப்படுத்தவும் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.

ஆசியாவை உற்றுநோக்கினால் சீனாவுக்கு இதில் நீண்ட பாரம்பரியம் உள்ளது. கிமு 3000-ல் பேரரசர் யு காலத்திலும், பின்னர் கிமு 550-ல் தத்துவஞானி கன்பூசியஸ் தொகுத்த 'ஷு கிங்' (Shu King) என்ற வரலாற்று நூலிலும் மக்கள் தொகை, விவசாயம், வர்த்தகம் குறித்த தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிபி 2 ஆம் ஆண்டில் ஹான் வம்சத்தினர் மேற்கொண்ட கணக்கெடுப்பில், அங்கு 57.67 மில்லியன் மக்கள் வசித்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று நாம் ஆங்கிலத்தில் பயன்படுத்தும் 'Census' ('மதிப்பிடுதல்) என்ற சொல், 'Censere' என்ற லத்தீன் சொல்லிலிருந்து உருவானதாகும். கிமு 6 ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசர் செர்வியஸ் துல்லியஸ் (Servius Tullius) இதனை ஒரு முறையான கட்டமைப்புக்குள் கொண்டுவந்தார். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பு, குடிமக்களின் சொத்துக்கள், வரிகள், இராணுவக் கடமைகள் மற்றும் உரிமைகளைத் தீர்மானிக்கப் பெரிதும் உதவியது.

இன்றய நவீன உலகின் முதல் முறைப்படுத்தப்பட்ட கணக்கெடுப்பு 1665 ஆம் ஆண்டில் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1790-ல் அமெரிக்காவிலும், 1801-ல் இங்கிலாந்து மற்றும் பிரான்சிலும் நவீன மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் நடைமுறைக்கு வந்தன.


இலங்கையின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் பின்னணி 

ஆசியப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மிக நீண்ட மற்றும் தனித்துவமான வரலாற்றைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்கிறது.

ஆரம்பகாலங்களில், அதாவது 1779 ஆம் ஆண்டு டச்சு ஆளுநர் வான் டி கிராஃப் (van de Graaff) காலத்திலும், பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பத்தில் 1824 ஆம் ஆண்டிலும் சில மக்கள் தொகை மதிப்பீடுகள் செய்யப்பட்டன. இருப்பினும், அவை முற்றிலும் 'சாதி' (Caste) அடிப்படையிலேயே அமைந்திருந்தன.

மேலும், தெற்காசியாவில் முதன் முதலாக விஞ்ஞான ரீதியான சனத்தொகைக் கணக்கெடுப்பு 1871 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி இலங்கையின் பதிவாளர் நாயகம் அலுவலகத்தினால் நடத்தப்பட்டது. இது அதுவரை நிலவிய சாதி ரீதியான வகைப்படுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, 'இனம்' (Race) மற்றும் 'தேசியம்' (Nationality) ஆகிய நவீன ஐரோப்பியக் கருத்துருக்களை அறிமுகப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தும் பாரம்பரியம் இலங்கையில் வேரூன்றியது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, 1944 ஆம் ஆண்டில் இதற்கெனத் பிரத்தியேகமாக 'தொகைமதிப்புத் புள்ளிவிபரத் திணைக்களம்' உருவாக்கப்பட்டது.

இவ்வாறு இடம்பெற்றுவந்த இந்த கணக்கெடுப்புப் பாரம்பரியம் சில சர்வதேச மற்றும் தேசிய வரலாற்று நிகழ்வுகளால் தடைபட்டது.

  • 1941: இரண்டாம் உலகப் போர் காரணமாகப் பிற்போடப்பட்டு 1946-ல் நடத்தப்பட்டது.
  • 1951: கொரியப் போரினால் ஏற்பட்ட உலகளாவிய காகிதத் தட்டுப்பாடு காரணமாக 1953-ல் நடைபெற்றது.
  • 1991: 1983-ல் ஆரம்பமான உள்நாட்டுப் போரின் தீவிரத்தினால் முற்றாகக் கைவிடப்பட்டது.
  • 2001: போர்ச் சூழலால் நாட்டின் 18 மாவட்டங்களில் மட்டுமே (வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகள் தவிர்த்து) கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

போர் நிறைவடைந்ததன் பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2012-ல் நாடளாவிய ரீதியிலான முழுமையான கணக்கெடுப்பு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இலங்கையின் தற்கால சனத்தொகை நிலவரம் – 2024 ஆம் ஆண்டின் புதிய தரவுகள்

இலங்கை தனது 15 வது சனத்தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பை 2024 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக நிறைவு செய்தது. இலங்கை வரலாற்றில் முதல் முறையாகத் தரவுச் சேகரிப்பிற்காகக் கணினித் தொழில்நுட்பங்களான டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்பட்டமை இதன் சிறப்பம்சமாகும். 2024 கணக்கெடுப்பின் முதற்கட்ட முடிவுகள் இலங்கையின் சமூகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தெளிவாக உணர்த்துகின்றன:

  •  மொத்த மக்கள் தொகை 

இலங்கையின் தற்போதைய சனத்தொகை 21,781,800 ஆகும். 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 1,403,731 பேரால் அதிகரித்துள்ளது. ஆயினும், வருடாந்த மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 0.5% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

  •   பாலின விகிதம்

மொத்த சனத்தொகையில் பெண்கள் 51.7% ஆகவும், ஆண்கள் 48.3% ஆகவும் உள்ளனர். அதாவது 100 பெண்களுக்கு 93.3 ஆண்கள் என்ற விகிதத்தில் பெண்களின் ஆதிக்கம் காணப்படுகிறது.

  • வேகமாக முதுமையடையும் சமூகம் (Rapid Aging)

இலங்கை எதிர்நோக்கும் மிக முக்கியமான சவாலாக இது உருவெடுத்துள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 2012-ல் 7.9% ஆக இருந்த நிலையில், 2024-ல் அது 12.6% ஆக சடுதியாக உயர்ந்துள்ளது. அதேவேளை, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் வீதம் 25.2% இலிருந்து 20.7% ஆகக் குறைந்துள்ளது. நாட்டின் உழைக்கும் வர்க்கத்தின் (15-64 வயது) வீதம் தற்போது 66.7% ஆகக் காணப்படுகின்றது.

  • இன மற்றும் மதப் பரம்பல்

 இன ரீதியாக சிங்களவர்கள் 74.1%, இலங்கைத் தமிழர்கள் 12.3%, இலங்கைச் சோனகர் (முஸ்லிம்கள்) 10.5%, மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் (மலையகத் தமிழர்) 2.7%. காணப்படுகின்றனர்.

மத ரீதியாக பௌத்தர்கள் 69.8%, இந்துக்கள் 12.6%, இஸ்லாமியர்கள் 10.7%, ரோமன் கத்தோலிக்கர்கள் 5.6% மற்றும் ஏனைய கிறிஸ்தவர்கள் 1.3% வசிக்கின்றனர்.

  • மாவட்ட ரீதியான புள்ளிவிவரங்கள்

கம்பஹா மாவட்டம் (2,433,685) அதிக மக்கள் வாழும் மாவட்டமாக முதலிடத்தில் உள்ளது. மேலும், கொழும்பு மாவட்டம் (2,374,461) ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3,549 பேர் என்ற அடிப்படையில் மிக அதிக சனத்தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது. அதேபோன்று, முல்லைத்தீவு மாவட்டம் சதுர கிலோமீட்டருக்கு 50 பேர் என்ற அடிப்படையில் மிகக் குறைந்த அடர்த்தியைக் கொண்டுள்ளது.

 உலகளாவிய மக்கள் தொகை: உச்சமும் வீழ்ச்சியும்

இன்று உலக மக்கள் தொகை 8.2 பில்லியனைத் தாண்டிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதில் கடந்த தசாப்தங்களில் பாரிய புவியியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

  • சனத்தொகை அதிகம் உள்ள நாடுகள் (2026):

பல தசாப்தங்களாக முதலிடத்தில் இருந்த சீனாவைப் பின்னுக்குத் தள்ளி, தற்போது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

  1.  இந்தியா: 1.47 பில்லியன் (1,476,630,000)
  2.  சீனா: 1.41 பில்லியன் (1,412,910,000)
  3.  அமெரிக்கா: 349 மில்லியன்
  4.  இந்தோனேசியா: 287 மில்லியன்
  5.  பாகிஸ்தான்: 259 மில்லியன்

  • சனத்தொகை மிகக் குறைந்த நாடுகள்:

நிலப்பரப்பு மற்றும் புவியியல் அமைவிடம் காரணமாகச் சில நாடுகள் மிகக் குறைந்த மக்களைக் கொண்டுள்ளன:

  1. வத்திக்கான் நகரம்: உலகின் மிகக் குறைந்த சனத்தொகை கொண்ட நாடு இதுவாகும். இங்கு சுமார் 500 முதல் 825 பேர் மட்டுமே வாழ்கின்றனர். சுவிஸ் காவலர்கள் மற்றும் மதகுருமார்களே இங்கு அதிகம். இங்கு குடியுரிமை பிறப்பால் அல்லாமல், திருச்சபைப் பணிகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.
  2. துவாலு: 9,362 முதல் 11,508 மக்களைக் கொண்ட பசிபிக் தீவில் அமைந்துள்ள ஒரு சிறிய  நாடாகும்.
  3. நாவூரு: சுமார் 12,101 மக்களைக் கொண்ட இத்தீவு, ஒரு காலத்தில் பொஸ்பேட் சுரங்கத் தொழிலால் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக விளங்கியது.
  4.  பலாவ்: சுமார் 17,614 மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாடாகும் 
  5.  சான் மரினோ : இத்தாலி நாட்டிற்குள் அமைந்துள்ள இந்த நாடு சுமார் 33,605 மக்களைக் கொண்டுள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பின் உயிர்நாடியாகும். அரசாங்கங்கள் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு மற்றும் சமூக சேவைகளுக்கான நிதியைச் சரியாக ஒதுக்கீடு செய்ய இப்புள்ளிவிவரங்களையே முழுமையாக நம்பியுள்ளன. அரசியல் பிரதிநிதித்துவத்தைத் தீர்மானிக்கவும், தனியார் நிறுவனங்கள் தமது வணிக முதலீடுகளைத் திட்டமிடவும் இது இன்றியமையாததாகும்.

குறிப்பாக, இலங்கையின் 2024 கணக்கெடுப்பு முடிவுகள், நாடு ஒரு முக்கியமான சமூக மாற்றத்தின் விளிம்பில் இருப்பதை ஆழமாகச் சுட்டிக்காட்டுகின்றன. வேகமாக முதுமையடைந்து வரும் சனத்தொகை மற்றும் குறைந்து வரும் பிறப்பு வீதம் ஆகிய சவால்களை எதிர்கொள்ள, அரசாங்கம் புதிய பொருளாதாரத் திட்டங்களையும், முதியோர் நலக் கொள்கைகளையும் உடனடியாக வகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சுருக்கமாகச் சொன்னால், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது நமது கடந்த காலத்தின் பதிவாகவும், நிகழ்காலத்தின் நிழற்படமாகவும், வளமான எதிர்காலத் திட்டமிடலுக்கான அசைக்க முடியாத தூணாகவும் திகழ்கிறது.

Previous Post Next Post